இயேசு உன்னை ஆதரிப்பார்
"கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளடவொட்டார்".(சங்கீதம் 55:22)
கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களுக்கு, இயேசுவின் நாமத்தில் நல் வாழ்த்துக்கள்! இந்த செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என கர்த்தருக்குள் நான் நம்புகின்றேன்!
1. கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு: பாரம் எனில், கண்ணீர், கவலை, தோல்வி, பயம், நிந்தை, சோர்வு, கடமை, பொறுப்பு மற்றும் சுமை என பொருள் படும். அனுதினமும் நாம் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகள் நமது வாழ்வில் கவலையை கொண்டுவருகின்றது. நாம் நினைத்தது நிறைவேறாத பட்சத்தில், சோர்வு, மற்றும் எதிர்காலத்தைக் குறித்த பயம் இவைகளை கொண்டு வருகின்றது. இங்கே வேதம் தெளிவாக அறிவுறுத்துகின்றது, கர்த்தர்மேல் இந்த சுமைகளை - பாரத்தை வைக்கவேண்டும். இதை எப்படி வைப்பது? சிலர் தங்கள் பாரத்தை கர்த்தர் மீது வீசி எறியவேண்டும் என எறிகின்றனர். வேறு சிலரோ, தங்கள் பிரச்சனைகளை பிறர் மீது வைத்து, நல்லவேளை அடுத்தவர் மீது போட்டுவிட்டேன் என விசுவாசிக்கின்றார்கள். இது வேத வசனத்துக்குப் புறம்பானது. தீமையைத்தான் கொண்டுவரும். மேலும் சிலர், தலையில் உள்ள பாரத்தை கீழே போடுவதுபோல ஆண்டவரை கீழே உட்காரவைத்து அவர் மீது போடவேண்டும் நினைக்கின்றனர், நமது நிலைக்குக் கீழ் கர்த்தரைக் கொண்டு வர முடியாது. அவர் துதிக்குப் பாத்திரர். சகலத்தையும் படைத்தவர்; உன்னதங்களில் வீற்று இருக்கின்றார். அவரை நாம் நமக்குக் கீழ்படுத்த முடியாது. மேல் வைத்துவிடு என்றால் அவரிடம் கொடுக்க வேண்டும். உள்ளத்தில் பாரம் வரும்போது ஆண்டவரிடம் கொடுத்துவிட வேண்டும். கொடுப்பது எப்படி? நமது ஜெபத்தின் மூலமாகவும், விசுவாசத்தின் மூலமாகவுந்தான் கொடுக்க வேண்டும்.
சமுதாயத்தில் அநேகர் தங்கள் கவலைகளை தாங்களே சுமந்து கொண்டிருக்கின்றனர். எனவே சுமை தாங்காமல் குடிப்பழக்கம், போதைக்கு அடிமை, மற்றும் தற்கொலைக்கு விரைகின்றனர். ஆண்டவர் ஒரு எளிய நேர்த்தியான் வழியை வைத்திருக்கின்றார், அது பாரத்தை ஆண்டவரிடம் கொடுத்துவிடுவதுதான். சுமையை ஆண்டவரிடம் கொடுப்பதால் வரும் பலன் எல்லாபுத்திக்கும் மேலான தேவ சமாதானம்.
ஒருமுறை சென்னையின் ஒரு பகுதியிலே, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். (நானும் நமது ஞாயிறு பள்ளி மாணவர்களும்) அப்பொழுது ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் வந்து நான் குடிக்காமல் இருக்க வேண்டும் எனக்காக் வேண்டுங்கள் எனக் கூறினார். சரியென்று அவர் வீட்டுக்குச் சென்றேன். அது ஓரறை வீடு. ஒரு கட்டிலிலே ஒரு சிறு குழந்தையோடு ஒருவர் படுத்திருந்தார். இது என்னுடைய பெரிய பெண். குழந்தை பிறந்து ஒருவாரந்தான் ஆகின்றது என்றார். அடுத்து வெளியே இருந்து ஒரு வாலிப பெண் உள்ளே வந்தாள். இவள் +2 படிக்கின்றாள். அடுத்து ஒரு மகன் 8வது படிப்பவன், தனது பெயரைக் கூட (ஜீவா) எழுதத்தெரியாது. அவரது மனைவி வீட்டிலே இருப்பவர். நான் ஒருவன் தான் இந்தக் குடும்பத்திலே சம்பாதிப்பவன். வருமானம் காணவில்லை. மேலும் என்னை என் வீட்டில் யாருமே மதிப்பதில்லை. எப்பொழுது வீட்டுக்கு வந்தாலும் பணம் கொண்டுவந்தியா? என்ற கேள்விதான் கேட்பார்கள், எனக்கு ஜுரம் இருந்தால் கூட வீட்டிலே சொல்லமாட்டேன். போற இடத்திலே மாத்திரையை வாங்கிப் போட்டுக்கொள்ளுவேன். எனக்கு கவலையாகத்தான் இருக்கின்றது என்றார். ஒரு தகப்பனின் நிலையைப் பாருங்கள்.
நான் அவர் மனைவியை பார்த்து, 'அவர் பனங்காயிக்கும் மரம் இல்லை. வேலை முடித்து வீட்டுக்கு வந்தால், வென்னீர் போட்டு வைக்க வேண்டும். அவருடைய சட்டை பேண்டை துவைத்து மடித்து வைக்கவேண்டும். அவரை மதியுங்கள்.' என்றேன். ஜீவாவுக்கு, டியுசனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தேன். படிக்கின்ற மகளைப் பார்த்து வீடு ஏன் சுத்தமாக இல்லை? வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் எனத் தெரியாதா? எனக் கேட்டேன். இனிமேல் சுத்தமாக வைக்கவேண்டும் என அறிவுறுத்தினேன். அவரிடம் பிள்ளைகளால் பற்றிய கவலை, பணப் பற்றாக்குறை இவற்றைப் பற்றிய நினைப்பு வரும்போது, ஆண்டவரிடம் சொல்லுங்கள் எனக் கூறி ஜெபித்த்துவிட்டு வந்தேன்.
ஆண்டவரிடம் பாரத்தைக் கொடுக்கும் போது, அவர் ஆதரிப்பார் / தாங்குவார். பாதம் கல்லில் இடறாதபடிக்கு.
கால்களைத் தள்ளாட விடமாட்டார்: பிரச்சனை வரும்போது அங்கும் இங்கும் ஓடி ஒளியாமல் ஸ்திரமாக நின்று சாதிக்க உதவி செய்வார். அல்லேலுயா! இன்றைய கிறிஸ்தவர்களில் பலர் ஜெபத்திலே தங்கள் பாரங்களை ஆண்டவரிடம் கொடுத்துவிடுகின்றனர். சமாதானத்தையும் பெற்றுக் கொள்ளுகின்றனர். மீண்டும் இந்தப் பிரச்சனை வந்துவிடுமோ என சந்தேகப் படுகின்றனர். இதனால் ஆண்டவரிடம் கொடுத்த சுமையை தாங்களாகவே வாங்கிக்கொண்டு, மீண்டும் சுமக்க ஆரம்பிக்கின்றனர். உள்ளத்தில் சமாதானத்தைப் பெற்றுக் கொண்டவுடனே அதைக் கொண்டாடவேண்டும். ஆண்டவர் வெற்றிசிறந்தார். மேலும் ஆண்டவருடைய நுகத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். (வேத வசனத்துக்கு கீழ்படிய வேண்டும்) நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும் என அறிக்கைபண்னவேண்டும். இவ்வாறு செய்யும்போது தமது கிருபையினாலே மூடி நடத்துவார்.
ஜெபிப்போம்!
எங்களை நேசிக்கின்ற எண்கள் அன்பின் தகப்பவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம். இதைப் படிக்கின்ற அனைவரும் தங்கள் கவலைகளை உடனுக்குடன் தேவனே உம்மிடத்தில் கொடுத்து நீங்காத சமாதானத்தை பெற்றுக் கொள்ள உதவி செய்வதர்ர்க்காய் நன்றி செலுத்துகின்றோம். எங்கள் கால்களைத் தள்ளாட வொட்டாமல் எங்களைக் காக்கிரபடியால் நன்றி. கடைசி காலத்திலேயே வெளிப்பட ஆயத்தமாக்கப் பட்டிருக்கிற இரட்ச்ப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற நாங்கள் பிதாவாகிய தேவனுக்கு துதியும் கணமும் மகிமையையும் செலுத்துகின்றோம். இயேசுவின் மூலம் பிதாவே.
![]() |
| இயேசு என்னை ஆதரிப்பார்! கிறிஸ்துவில் பிரியமானவர்களே உங்களது மேலான கருத்துக்களை பிறருக்கு நன்மையுண்டாக இங்கே பதிவு செய்யும்படி வேண்டுகின்றேன்! |





